Last Updated : 28 Jun, 2025 03:30 PM

 

Published : 28 Jun 2025 03:30 PM
Last Updated : 28 Jun 2025 03:30 PM

புதுச்சேரி பாஜகவில் பிளவை தடுக்க 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா - சாய் சரவணக்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

புதுச்சேரியில் அமைச்சர் சாய் சரவணன் குமார் ராஜினாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

புதுச்சேரி: கட்சி பிளவைத் தடுக்க அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பட்டியலின அமைச்சரின் ஆதரவாளர்கள், அமைப்புகளால் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் என்ஆர். காங்கிரசுக்கு முதல்வர், 3 அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு பேரவைத்தலைவர், 2 அமைச்சர்கள் தரப்பட்டன.மத்திய அரசு நேரடியாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது.

ஆட்சியில் இடம் பெற்றதால் பாஜக வளர்ச்சி பெறும் என கட்சி தலைமை கருதியது. ஆனால் எதிர்மறையாக புதுவை பாஜகவில் கோஷ்டிகள் உருவானது. ஆட்சி அமைந்த நாள் முதலே அமைச்சரவையில் இடம்பெறாத பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரிய பதவி கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினர். போராட்டங்களும் நடத்தினர். சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க கோரிக்கை விடுத்தனர். அதுவும் நிறைவேறவில்லை.

இச்சூழலில் புதுவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸிடம் தோற்றார். ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்தது. எம்எல்ஏக்கள் தன்னிச்சையாக செயல்பட்டதோடு கட்சி விழாக்கள், நிகழ்ச்சிகளை புறக்கணிக்கத் தொடங்கினர்.

பாஜக எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு சுயேட்சைகள் ஒன்றிணைந்து லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸை புதுச்சேரி அழைத்து வந்து விழாக்கள் நடத்தி நலத் திட்டங்களைத் தர தொடங்கினர். சில எம்எல்ஏக்கள் பாஜகவில் இருப்பார்களா என்ற ரீதியில் செயல்படத் தொடங்கினர்.

இந்நிலையில் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு முதல் நாள் இவர்களின் ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சென்று சிபிஐ விசாரணைக் கோரினர். இதனால் புதுவை பாஜகவில் பிளவு ஏற்படலாம் என கருதப்பட்டது. அதோடு இந்த நிலை நீடித்தால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வீழ்ச்சியை சந்திக்கும் சூழல் உருவானது.

கட்சி பிளவை தடுக்க மேலிட உத்தரவின் பேரில் அமைச்சர் சாய் சரவணன் குமார் உள்ளிட்ட நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர் பதவியை, அதிருப்தி எம்எல்ஏ ஜான்குமாருக்கு வழங்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அதுபோல் புதிய நியமன எம்எல்ஏக்களாக காரைக்காலை சேர்ந்த ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மற்றும் பாஜக மூத்த நிர்வாகி செல்வம் ஆகியோரரை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் பட்டியலின அமைச்சர் சாய் சரவணக்குமார் ராஜினாமாவால் அவரது ஆதரவாளர்கள் கொதித்து போய் பாஜக தலைமைக்கும் அரசு தரப்புக்கும் எதிராக கேள்வி எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி நகரிலும், பாஜக அலுவலக சாலையிலும் பாஜகவுக்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பட்டியலின கூட்டமைப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில், “தென்னிந்தியாவிலேயே பட்டியலின சமூகத்தில் பாஜகவில் அமைச்சராக இருந்தவர் சாய் சரவணன் குமார். அவரது பதவியை பறித்த தேசிய தலைமையையும், புதுச்சேரி தலைமையையும் கண்டிக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரி அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர் சந்திரபிரியங்காவை முதல்வர் ரங்கசாமி நீக்கிவிட்டார். தற்போது பாஜகவில் இருந்த அமைச்சர் சாய் சரவணக்குமாரும் கட்சி தலைமை உத்தரவால் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் புதிதாக யார் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் பட்டியலின சமூகத்தின் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் கிடைக்காது என கண்டனம் எழுத்தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x