Last Updated : 28 Jun, 2025 12:39 PM

1  

Published : 28 Jun 2025 12:39 PM
Last Updated : 28 Jun 2025 12:39 PM

திருச்சி மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் - திமுக அரசை கண்டித்து ஜூலை 3ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசைக் கண்டித்தும்; திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா வேதனையை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதன் விபரம் வருமாறு: திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3600-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விடியா திமுக அரசின் முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சிறிய மழைக்கே, புதிய பேருந்து நிலையக் கட்டடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகளின் வழியே மழைநீர், பயணிகள் நிற்கும் நடை மேடையில் விழுவதை பொதுமக்கள் கிண்டலடித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. திமுக அரசு இம்முனையத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் அவசர கதியில் திறந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, திருச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், வெளியூர்களில் இருந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளாக இருக்கட்டும், அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் மற்றும் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செல்வதால், மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

திருச்சி மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக திருச்சி மாநகர மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.

பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், தார் உருகியும் பள்ளங்கள் ஏற்பட்டு, பார்ப்பதற்கு வேகத் தடைபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் பழுதடைந்துவிடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியல் போட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், மக்களை நாள்தோறும் பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; திருச்சி வடி மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும்; திருச்சி மாநகரில் கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரயில்வே மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும்; பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும்; பாலக்கரை சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், 3.7.2025 – வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x