Last Updated : 28 Jun, 2025 11:29 AM

2  

Published : 28 Jun 2025 11:29 AM
Last Updated : 28 Jun 2025 11:29 AM

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் - ஜூலை 1ல் தொடங்குகிறார் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், கட்சியின் தொழில்நுட்ப அணிச் செயலாளர், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

மாநிலக் கட்சியான திமுக இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள். இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது.

ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் திமுகவினர் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x