Published : 28 Jun 2025 05:33 AM
Last Updated : 28 Jun 2025 05:33 AM
சென்னை: சாலைப்பணிகளில் கவனக் குறைவு மற்றும் கடமையில் அலட்சியமாகச் செயல்படும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்களின் பணிகள் தொடர்பாக, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த அனைத்து தலைமைப் பொறியாளர்களும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் பேசியதாவது:
தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்களுடன் தலைமையிடத்தில் மாதம் ஒருமுறை பணி முன்னேற்றம், விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் கோப்புகள், நில எடுப்பு, நீதிமன்ற வழக்குகள் போன்ற முக்கியப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தலைமைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கோட்டப் பொறியாளர்கள், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுடன், கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும். கோட்டப்பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட களப்பொறியாளர்களுடன் தணிக்கை நாள் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.
சாலைகள் குறுக்கே பாலங்கள் கட்டும்போது, போதிய தடுப்புகள் வலிமையாக அமைக்கப்பட வேண்டும். இரவில், ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் பிரதிபலிப்புப் பதாகைகள் வைக்கப்பட வேண்டும். கவனக் குறைவு மற்றும் கடமையில் அலட்சியமாகச் செயல்பட்டால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலையின் தரத்தை பல்வேறு கட்டங்களில், தரக்கட்டுப்பாட்டு ஆய்வு செய்ய வேண்டும். முத்திரைத் திட்டங்கள் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கும், செயலருக்கும் பணியின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்டப் பாலம், மதுரை அப்போலோ பாலம், மதுரை ராஜாஜி சந்திப்பு அருகே பாலம் போன்ற முக்கியமான பணிகளில் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்.
புறவழிச் சாலைகள் அமைக்க அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும், சில புறவழிச்சாலைப் பணிகள் நிறைவுபெறாமல் உள்ளன. இதில், தலைமைப் பொறியாளர்கள் உரிய கவனம் செலுத்தவேண்டும் இப்பணிகள் அனைத்தையும் ஜூலை 30-க்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் துறை செயலர் இரா.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT