Published : 28 Jun 2025 04:40 AM
Last Updated : 28 Jun 2025 04:40 AM

‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ - ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, "மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்" என்ற தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறார்.

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் பழனிசாமி, "இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். அங்கு மக்களை சந்தித்து, திமுக அரசின் அவலங்களை விளக்க இருக்கிறேன்" என அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் மக்கள் பாதிப்பு, பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் நிலவிய தயக்கம், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி என பல்வேறு பணிகள் இருந்ததால், பிரச்சார பயணத்தை தள்ளிப்போட்டு வந்தார்.

இதற்கிடையில் பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மாநிலங்களவைத் தேர்தலும் முடிந்தது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகள் நியமனமும் 90 சதவீதம் நிறைவடைந்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலும் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம், பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, "மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு வரும் ஜூலை 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதற்கட்ட தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்குகிறார்.

பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8-ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதிகள், 11-ம் தேதி வானூர், மயிலம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 12-ம் தேதி கடலூர் மாவட்டம் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகள், 14-ம் தேதி குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதேபோல் 15-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகள், 16-ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் ஆகிய தொகுதிகள், 17-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

தொடர்ந்து, 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம், 19-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு, 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x