தனது வாழ்நாளில் பொது வாழ்க்கைக்காக 80 ஆண்டுகளை ஒப்படைத்தவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் விழா மலரை வெளியிட்டார். உடன் அமைச்சர் மு.பெ.சாமி
நாதன், ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாடமி செயலர் னிவாசராவ். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் விழா மலரை வெளியிட்டார். உடன் அமைச்சர் மு.பெ.சாமி நாதன், ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாடமி செயலர் னிவாசராவ். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
2 min read

சென்னை: தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

சாகித்ய அகாடமி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

‘முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிதை, புனைகதை, செவ்வியல், நாடகம், திரை வசனம், உரைநடை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

கருணாநிதி பன்முகத் திறன் பெற்றவர் என்பதை இது காட்டுகிறது. அவர் தனது வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர். வாழ்வையே தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்ததால்தான் 5 முறை தமிழக முதல்வராக அவரால் இருக்க முடிந்தது.

இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாக கருதினார். ‘எனது செங்கோலை பறித்துவிடலாம். ஆனால், எனது எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது’ என்றார். இலக்கியவாதிகளுக்காக கருணாநிதி ஏராளமான பணிகளை செய்தார். அவர் முதல்வராக இருந்தபோது, 108 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, நூல் உரிமை தொகையாக ரூ.7.76 கோடி வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, கடந்த 4 ஆண்டுகளில் எனது ஆட்சியில் 36 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, நூல் உரிமை தொகையாக ரூ.425 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளிகளுக்கு வீடு வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டத்தை தமிழக அரசு கடந்த 2022-ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் இதுவரை 25 பேருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கம் கருணாநிதியின் புகழ்பாடுவதாக மட்டும் இல்லாமல், அவர் விரும்பிய சமத்துவம், முற்போக்கு சிந்தனை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பயன்பட வேண்டும். தமிழ் சமூகத்தில் கருணாநிதி போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும், அங்கீகரிக்க வேண்டும். அதுதான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும். இதைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது. சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்த பணியை தொய்வின்றி தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், சாகித்ய அகாடமி செயலர் சீனிவாச ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர்களால் சலசலப்பு: நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகளை வீடியோ எடுக்கும்போது, முன்வரிசையில் இருந்த மாணவர் ஒருவர் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்தார். அதில், தவெக தலைவர் விஜய் படம் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. உற்சாக குரல் எழுப்பிய 3 மாணவர்களை அரங்கத்தில் இருந்து போலீஸார் வெளியேற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in