அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்
Updated on
2 min read

அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிசாமி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் அதிமுகவுக்கு எதிரான இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா? என்பதை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனக்குரிய அதிகார வரம்பு குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரியும் அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக வேண்டிய சூழலில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகார வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு அதிமுக குறி்த்த தேவையற்ற தகவல்களைப் பரப்ப வழிவகுத்துவிடும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் தேர்தல் ஆணையத்தின் இத்தகையப் போக்கை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அதிகார வரம்பு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் இனியும் தாமதிக்காமல், துரிதமாக நடத்தி முடிக்கும் வகையில் காலவரம்பை உயர் நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும், தற்போது வரை எந்த உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை. 2026 தேர்தலுக்குத் தயாராக வேண்டியிருப்பதால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கோரினார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in