“உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை வழங்க முயற்சி” - அப்பாவு

அப்பாவு | கோப்புப்படம்
அப்பாவு | கோப்புப்படம்
Updated on
1 min read

நாகர்கோவில்: “இந்து சமய அறநிலையத் துறையை நீக்கம் செய்து உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை கொண்டு செல்ல நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது” என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.

கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோவில் வந்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “பாஜக ஆளும் ஒடிசாவில் இந்து அறநிலையத் துறை உள்ளது. பாஜகவின் தோழமைக் கட்சி ஆட்சி நடத்தும் பிஹாரில் அறநிலையத் துறை உள்ளது. சுதந்திரம் கிடைத்த பிறகு கூட இந்து ஆலயங்கள் உள்ள தெருக்களில் 10 சதவீத உயர்சாதி மக்களை மட்டுமே அனுமதித்தனர். மீதி 90 சதவீத மக்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியவில்லை . இந்த 90 சதவீத மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத் துறை.

இந்து சமய அறநிலையத் துறை நீக்கப்பட்டு விட்டால் ஏற்கெனவே இருந்தது போல் உயர் சாதி இந்துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை கொண்டு சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது.

மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து பத்தாண்டு முடிவடைகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமானங்கள் அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோல் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களை எல்லாம் தனியாருக்கு ஒதுக்கி இதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதானி தமிழக மின்சார துறைக்கு 7 சிசிபி திறன் கொண்ட நிலக்கரி கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தார். ஆனால் நான்கரை சிசிபி திறன் கொண்ட நிலக்கரி வழங்கி அரசுக்கு 826 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அரசின் தணிக்கை துறை தெரிவிக்கிறது.

பிரதமர் மோடியின் நண்பர் அதானி என்பதால் இந்த ஊழலுக்கு காரணம் பிரதமர் என்று கூறலாமா?. இதுபோன்ற ஊழல் செய்த முகாரி சிறையில் உள்ளார். இதே குற்றத்தை செய்த அதானி, பிரதமர் மோடியின் பின்னால் உள்ளார். முகாரியின் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் தூத்துக்குடியில் உள்ளன. அந்த 2 அனல் மின் நிலையங்களையும் அதானி பெயருக்கு எழுதி கொடுத்த பின்னர் தான் முகாரிக்கு ஜாமீன் கிடைத்தது.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் ஓயாத உழைப்பால் தான் இன்று தமிழ்நாடு 9.6 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்று இருக்கிறது. தமிழகத்தை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாது” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in