சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு பூவை ஜெகன்மூர்த்தி ஒத்துழைப்பு தரவில்லை: ஐகோர்ட்டில் காவல் துறை வாதம்

சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு பூவை ஜெகன்மூர்த்தி ஒத்துழைப்பு தரவில்லை: ஐகோர்ட்டில் காவல் துறை வாதம்
Updated on
2 min read

சென்னை: “சிறுவன் கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி என்ன? திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தனுஷின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்நிலையில், தன்னையும் காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் வழக்கில் தொடர்புடைய, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆஜரன பூவை ஜெகன் மூர்த்திக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதேபோல் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் தொடர் விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.

தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் சஸ்பெண்ட் உத்தரவில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தது. விசாரணை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இன்றைய வாதம்: இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூன் 27) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

ஜெகன்மூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், “வழக்கின் பின்ணணி குறித்து குறிப்பிட்டார். ஜெகன்மூர்த்திக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, விசாரணைக்காக எந்த நோட்டீஸும் வழங்கவில்லை, மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற தினத்தில் மனுதாரர் திருமண நிகழ்வுகளுக்கு சென்று விட்டார், சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில், பலர் உதவி கேட்பார்கள். அதன்படி மகேஸ்வரி உதவி கேட்க, சட்டப்படி செய்யுங்கள் என அறிவுறுத்திச் சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட இருவரை மனுதாரர் பார்த்ததே இல்லை. வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று வாதிட்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “காவல்துறை முன்பு பூவை ஜெகன்மூர்த்தி அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது, இந்த சம்பவத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, அவரின் பதில் தெளிவாக இல்லை. முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை களைத்துவிடுவார். பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. ஏடிஜிபி க்கு தொடர்பு உள்ளது. புகைப்பட ஆதாரங்கள் உள்ளது சம்பவத்தின் போது ஜெகன் மூர்த்தியும், ஏடிஜிபியும் சந்தித்துள்ளார்கள். இந்த வழக்கில் உங்களுடைய உத்தரவு பாடமாக அமைய வேண்டும்.” என்று வாதிட்டார்.

மேலும், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஏடிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார் அவர் மீதான விசாரணையும் தொடரும் எனவும் வல்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in