அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை விநியோகித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

உணவு தரமற்று இருப்பதோடு, அவை தயாரிக்கும் முறையும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் தட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, என அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி வரும் அரசுப்பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது அப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்குவதோடு, அவர்கள் பயிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in