ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.150 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.150 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், ரூ.150 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 82-வது பட்டமளிப்பு விழா, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஸ்டான்லி அரசு மருத்துவமனை வட சென்னை மக்களின் மருத்துவ தேவையை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.66.38 கோடியில் உயர் சிறப்பு மருத்துவ மைய கட்டிடம், ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம், ரூ.2.50 கோடி செலவில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், சீரமைக்கப்பட்ட மாணவர் நூலகம், கருத்தரங்கு கூடம், உணவு கூடம், திறன் ஆய்வகம், நூற்றாண்டு நிர்வாக அலுவலக கட்டிடம் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் இந்த மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போதும் கூட ரூ.13 கோடி செலவில் 5 தளங்கள் கொண்ட செவிலியர் பயிற்சி பள்ளி, ரூ.22 கோடியில் செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், ரூ.112 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் மட்டும் ரூ.150 கோடி செலவிலான பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கல்லூரியில் படித்த பலரும் உலக புகழ்பெற்ற மருத்துவர்களாகவும், மத்திய அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர்களை தந்த கல்லூரி இந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி. தமிழகத்தை பொருத்தவரை 11,850 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் முடித்து வெளியில் வருகிறார்கள்.

இதில், 5,050 பேர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் எனது கரங்களால் பட்டங்களை வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது.

மருத்துவ படிப்புக்கு எல்லையே கிடையாது. எனவே, எம்பிபிஎஸ் பட்டத்துடன் நின்றுவிடாமல், மேற்கொண்டு படித்து உலக புகழ்பெற்ற மருத்துவர்களாக, மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களாக நீங்கள் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், திமுக எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் இரா.மூர்த்தி, ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in