

சென்னை: ரயில் கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீண்ட தூர பயணங்களுக்கும், நீண்ட நாட்கள் சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கும் ரயில் போக்குவரத்தை பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இந்தச் சூழலில், ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்த உத்தேசித்துள்ள ரயில் கட்டணத்தை கைவிடவும், சாதாரண வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், முதியோருக்கான ரயில் சலுகையை மீண்டும் அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.