வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,800 கோடியில் 281 பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,800 கோடியில் 281 பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
Updated on
1 min read

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6,800 கோடியில் 281 பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், திரு.வி.க. நகர் தொகுதி, பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் மற்றும் புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் கட்டப்பட்டு வரும் சலவைக் கூடம் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டம் ரூ.1000 கோடி என்று முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்டமாக ரூ.2,400 கோடி என்றும், 3-ம் கட்டமாக ரூ.6,800 கோடி செலவில் சுமார் 252 பணிகள் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறகு, கூடுதலாக மறுபடியும் 29 பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், 51 பணிகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

பெரம்பூர், சந்திரயோகி சமாதி தெருவில் 600 இருக்கைகள், உணவு கூடம், பார்க்கிங் வசதியோடு கூடிய ரூ.15 கோடி செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடைபெறுகிறது. வியாசர்பாடி, கன்னிகாபுரம் மைதானத்தில் ரூ.11 கோடி செலவில் பாக்சிங் மற்றும் கிரிக்கெட், வாலிபால், உடற்பயிற்சி கூடங்கள் பொருந்திய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து வரும் செப்டம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற அனைத்து பணிகளையும் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in