ரூ.100 கோடி இயந்திரங்களை விற்ற சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

ரூ.100 கோடி இயந்திரங்களை விற்ற சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: வங்கி கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட ரூ. 100 கோடி மதிப்புள்ள இயந்திரங்களை திருட்டுத்தனமாக விற்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் என்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 120 கோடியும், மற்ற வங்கிகள், ஸ்ரீநிதி ஃபைனான்ஸ் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களிலும் கோடிக்கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கடன் தொகைக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலையின் சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல், திருட்டுத் தனமாக விற்று, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐக்கு, வங்கி நிர்வாகங்கள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடக்கோரி, ஸ்ரீநிதி ஃபைனான்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், அந்த ஆலை நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் வராக் கடன்களாக அறிவிக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் வங்கி கணக்குகள் மோசடி கணக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் திரும்பப் பெறப்பட்டு விட்டது. இதன் காரணமாகவே, சிபிஐ தரப்பில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அந்த ஆலை நிர்வாகம் ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட இயந்திரங்களை ஆலை நிர்வாகம் திருட்டுத் தனமாக விற்றுள்ளது. ஆலை நிர்வாகத்தின் இந்த மிகப் பெரிய மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டிய சிபிஐ, எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தற்போது தனியார் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆலைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில், சிபிஐ மூன்று வாரங்களில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, ஆலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in