சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுவிப்பு

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுவிப்பு
Updated on
1 min read

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக சார்பில் கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். 08-05-2006 அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் சி.வி.சண்முகம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. உடனே அவர், காருக்கு கீழே புகுந்து உயிர் தப்பினார். அந்தக் கும்பலை தடுத்த, அதிமுக பிரமுகர் முருகானந்தம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன் பரசுராமன் உள்ளிட்டோர் மீது சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ரோஷனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கில் இருந்து ராமதாஸ், அன்புமணி, பரசுராமன் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

ராமதாஸின் சகோதரர் சீனு கவுண்டர் எனும் சீனிவாசன், வேட்பாளர் கருணாநிதி, குமரவேல் என்கிற குமரன், சிவா, நந்தா என்கிற நந்தகுமார், டைலர் சுதாகர், டிரைவர் சுதாகர், ரமேஷ், பிரபு என்கிற பிரபாகரன், செந்தில், சவுரி, செல்வம் என்கிற மொளாசூர் செல்வம், கோபி, இளஞ்செழியன், செந்தில்குமார், பன்னீர்செல்வம், நடராஜ், ஜெயராஜ், ஆர்.குமரன், சுரேஷ் ஆகிய 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு கடந்த 2011-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, திண்டிவனத்தில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, சீனிவாசன், ரமேஷ், மொளாசூர் செல்வம், இளஞ்செழியன், சுரேஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 15 பேர் மீது விசாரணை நடைபெற்றது. சி.வி.சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்குவதற்காக ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் ஆஜராகினர். சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்து 15 பேரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in