ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன், மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன், மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
Updated on
1 min read

மதுரை: ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன் மற்றும் மகளுக்கு மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறையில் வனவராகப் பணிபுரிந்தவர் வறுவேல். 1982-ல் மருத்துவத் தகுதியின்மை காரணமாக இவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1998-ல் இறக்கும் வரை அவர் ஓய்வூதியம் பெற்று வந்தார். பின்னர், அவரது மனைவி மரியரோஸ் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார்.

அவர் 2016-ல் இறந்தார். இவர்களின் மகன்கள் ஜெரால்டு, தர்சியஸ். இவர்களில் ஜெரால்டு மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் ஜெரால்டுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அவரது சகோதரர் தர்சியஸ் அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பினார். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தனி நீதிபதி குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு கடந்த பிப். 10-ம் தேதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக தலைமை கணக்காயர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி உத்தரவு நிறைவேற்றப்பட்டது தெரியவந்தது. அதன் பிறகு ஏன் இந்த மேல்முறையீடு என வினவியபோது, தனி நீதிபதி உத்தரவில் தலைமைக் கணக்காயர் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்திருப்பதாக கூறப்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு பிந்தைய நடத்தையைக் கருத்தில் கொண்டு, அந்த கருத்துகள் நீக்கப்பட்டன.

ஓய்வூதிய விதிகளில் அரசு ஊழியரின் மகன் அல்லது மகள் 25 வயதைக் கடந்து, வாழ்க்கை நடத்த முடியாதபடி மனநலப் பாதிப்பு மற்றும் வேறு குறைபாடுகளுடன் இருந்தால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.

இறந்த ஊழியரின் மகன்/மகள் தனது மனநிலை அல்லது மாற்றுத்திறன் காரணமாக சொந்தமாக வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாது என்பதை உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளபோது, அதிகாரிகள் அதற்கு மேல் எதையும் கேட்க முடியாது. இதை 30 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஓய்வூதியம் என்பது உரிமை சார்ந்தது. அது தர்மமாகவோ, தாராள மனப்பான்மையுடனோ வழங்கப்படுவது அல்ல. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரரின் மகன்/மகளுக்கு மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்தவுடன், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து ஆதாரங்களிலிருந்தும் வருமானம் தொடர்பான சான்றிதழ் கேட்டு வலியுறுத்தாமல், சட்டப்பூர்வ விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, எந்த தாமதமும் இல்லாமல் குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in