தேர்தல் ஆதாயத்துக்காக பாஜகவுக்கு துணைபோகும் அதிமுக: திருமாவளவன் விமர்சனம்

தேர்தல் ஆதாயத்துக்காக பாஜகவுக்கு துணைபோகும் அதிமுக: திருமாவளவன் விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுக்கு அதிமுக துணைபோவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தி, சம்ஸ்கிருதத்தை தேசிய அளவில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். கூடுதல் நிதி ஒதுக்கி சம்ஸ்கிருதத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும் அவர்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை பொருட்படுத்துவது இல்லை.

ஆங்கிலத்தை தூக்கியெறிய வேண்டும் என வெளிப்படையாக பேசுகின்றனர். பிற மொழி பேசுபவர்களை நசுக்குவதில் குறியாக உள்ளனர். பாஜக, சங்பரிவார்களை ஆதரிப்பவர்கள் இதையெல்லாம் சீர்தூக்கி, சிந்தித்து பார்க்க வேண்டும்.

மதுரையில் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு நடந்திருந்தால், தமிழக மக்களால் மதிக்கக்கூடிய பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது. அத்தகைய மாநாட்டில் அதிமுக பங்கேற்றது அதிர்ச்சி அளிக்கிறது.

வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக, அண்ணா, பெரியாரை விமர்சித்தாலும், தலைவர்களை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அவர்களோடுதான் தேர்தல் களத்தை சந்திப்போம் என்ற நிலையில் அதிமுக உள்ளது.

அண்ணா, பெரியாரை பழித்த பிறகும், பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவர்களோடுதான் அதிமுகவினர் பயணிக்க போகிறார்களா என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக மேடையில் பேசுவதையும், தேர்தல் நேர பேச்சுவார்த்தையில் நடைபெறுவதையும் முடிச்சு போட்டு பார்க்க தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in