​முன் அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது குற்றம்சாட்ட முடி​யாது: ஐகோர்ட்

​முன் அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது குற்றம்சாட்ட முடி​யாது: ஐகோர்ட்
Updated on
1 min read

முன்அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்காக தொழிலாளர் மீது குற்றம் சாட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர் கடந்த 2006-08 காலகட்டத்தில் முன்அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். தடையில்லா சான்று (என்ஓசி) பெறாமல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். விடுப்பு எடுத்த நாட்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் ரூ.2 ஆயிரம் அபராதம் விதி்த்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மேல்முறையீடு செய்தார். நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

மனுதாரர் இளங்கோவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.அசோக்குமார்: மனுதாரர் விடுப்பு கோரி முறையாக விண்ணப்பித்து விட்டுதான் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் தனது கிளைக்கு அதிக அளவில் முதலீடுகளை திரட்டி கொடுத்துள்ளார். கிளை மேலாளர் என்பதால் தினமும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அவசியம் இல்லை. அவர் 117 நாட்களுக்கு மோசடி செய்து சம்பளம் பெறவில்லை. அவருக்கு சம்பளம் வழங்கியது நிர்வாகம் செய்த தவறு. அந்த தவறுக்கு மனுதாரர் மீது மோசடி குற்றம் சாட்ட முடியாது.

சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன்: வெளிநாடு செல்வதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதியும், தடையில்லா சான்றும் பெற்றிருக்க வேண்டும். அவர் விதிமுறைகளை மீறி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற 117 நாட்களை முன்அனுமதியின்றி எடுத்த விடுப்பாகவும், அந்த காலகட்டத்துக்கு பெற்ற ஊதியத்தை, நிர்வாகத்துக்கு ஏற்படுத்திய இழப்பாகவுமே கருத முடியும்.

இவ்வாறு வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘விடுப்பு கோரி விண்ணப்பித்த நிலையில், அதை அனுமதியின்றி எடுத்த விடுப்பாக கருத முடியாது. விடுப்பு எடுத்த காலகட்டத்துக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கியதற்கு, தொழிலாளர் மீது மோசடி குற்றம் சாட்ட முடியாது. மேலும், உயர் அதிகாரிகளின் முன்அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, மனுதாரரை பொறுப்பாக்க முடியாது’’ என்று கூறி, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in