Published : 25 Jul 2018 05:52 PM
Last Updated : 25 Jul 2018 05:52 PM

சிங்கம் சூர்யா கெட்டப்பில் 9 பெண்களை ஏமாற்றித் திருமணம்: ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த மோசடி இளைஞர் 3-வது முறையாக சிக்கினார்

சிங்கம் சூர்யா போன்ற தோற்றத்துடன் ஐபிஎஸ் அதிகாரி என்று 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகைகளை பறித்து இரண்டு முறை கைதான போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நேற்று மூன்றாவது முறையாக கைவரிசை காட்டி சிக்கினார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாயாஜால் பின்புறம் உள்ள பண்ணை வீட்டுக்கு கடந்த வாரம் வட இந்தியாவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியைப் போல கம்பீரமாக வெண்ணிற பொலீரோ ஜீப்பில் வந்து இறங்கியுள்ளார். இங்குள்ள பண்ணை வீடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் சிறப்பு அதிகாரியாக அனுப்பப்பட்டவர் என்று அங்குள்ளவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

'சிங்கம்' சூர்யா போன்று மீசை வைத்து கம்பீரமாக இருந்த அந்த அதிகாரியைப் பார்த்து பண்ணை மேலாளரும் நம்பி விட்டார். அந்தப் பண்ணை வீட்டிலேயே சொகுசாக ஒரு காட்டேஜை ஒதுக்கிக்கொடுத்த மேலாளர் சகல விதத்திலும் அவரை கவனித்துக்கொண்டார்.

அங்கிருந்து மறுநாள் ஆய்வுக்கு கிளம்பிய ஐபிஎஸ் அதிகாரி மற்ற பண்ணை வீடுகளுக்கும் தனது வெண்மை நிற பொலிரோ ஜீப்பில் கிளம்பி இதே கதையைக் கூறியுள்ளார். ஏற்கெனவே தான் தங்கியுள்ள பண்ணை வீட்டின் வேலையாட்கள் சொல்லிவிட்டதால் தயாராக இருந்த பக்கத்து வீட்டின் ஆட்களும் அவருக்கு ராஜ மரியாதை கொடுத்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த லோக்கல் போலீஸார், போலீஸ் ஜீப் ஒன்று நிற்பதையும் அருகில் அதிகாரி ஒருவர் நிற்பதையும் பார்த்து எதற்கும் சல்யூட் அடித்து வைப்போம் என்று சல்யூட் அடித்துள்ளனர்.

அவர்களைப் பார்த்த அதிகாரி, 'எந்த ஸ்டேஷன் என்ன டூட்டி இங்கே எதற்கு வந்தீர்கள்?' என்று கேள்விகளை அடுக்கியுள்ளார். இதனால் அரண்டுபோன அவர்கள் 'வழக்கமான பாரா டூட்டிதான் சார்' என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம்னு வந்துவிட்டனர்.

ஆனாலும் அவர்களுக்குள் ஒரு சந்தேகம் ஐபிஎஸ் அதிகாரி என்றால் தோள்பட்டையில் மூன்று ஸ்டார் எப்படி? அசோக சின்னம் இருக்கவேண்டும். ஒரு பிஎஸ்ஓ உடன் இருப்பார், ஜீப்புக்கு டிரைவர் இருப்பார். ஆனால் யாரையும் காணோமே என்று யோசித்துள்ளனர்.

ஆனாலும் நமக்கேன் வம்பு என்று வந்துவிட்டனர். இந்த விஷயம் மெல்லக் கசிந்து அடையாறு துணை ஆணையர் கவனத்துக்குச் சென்றது. நமக்குத் தெரியாமல் ஐபிஎஸ் அதிகாரியா? எந்த பேட்ச் எந்த ஸ்டேட் என்று விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்.

போலீஸார் ரகசியமாக அந்த அதிகாரியைக் கண்காணித்தபோது அவர் பண்ணை வீடுகளில் மிரட்டிப் பணம் பறிப்பது தெரியவந்தது. அவரது நடத்தை அவர் போலி அதிகாரியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 'ஐயா உங்களை பார்க்க ஆசைப்படுகிறார்' என்று அடையாறு துணை ஆணையர் சார்பில் அழைப்பு போக, தெம்பாகச் சென்ற அந்த அதிகாரியை இரண்டு மூன்று கேள்விகள் கேட்டவுடனேயே போலி அதிகாரி என்று அடையாறு துணை ஆணையர் அடையாளம் கண்டுகொண்டார்.

அடுத்த கணம் போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்தவுடன் அனைத்து உண்மைகளையும் அந்த அதிகாரி கக்கி விட்டார்.

அப்போது அவரைப் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், 'இவரு பழைய ஆசாமியாச்சே. ஏற்கெனவே கொளத்தூரில் சிக்கியிருக்கிறார்' என்று போட்டுடைக்க அவரது அத்தனை வரலாற்றையும் போலீஸார் எடுத்தனர். இதையடுத்து போலீஸ் அதிகாரியாக நடித்து மோசடி செய்ததாக அவரைக் கைது செய்தனர்.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பால மணிகண்டன் (32) என்பதும் அயனாவரம், பழனி ஆண்டவர் கோயிலைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீஸ் அதிகாரியாக வேண்டும் என சிறுவயது முதல் லட்சியமாக இருந்த பால மணிகண்டன் போலீஸ் அதிகாரியாவதற்கான முயற்சியை சரிவர மேற்கொள்ளாததால் அவர் எண்ணப்படி அதிகாரியாக முடியவில்லை.

அதனால் மூர்மார்க்கெட்டில் போலீஸ் யூனிபார்ம் வாங்கி மாட்டிக்கொண்டு அதிகாரிபோல் பந்தா காட்ட ஆரம்பித்துவிட்டார். இப்படி அவர் போலி போலீஸாக நடிக்க ஆரம்பித்தது 2013-ம் ஆண்டு. அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், ''நான் ஐபிஎஸ் அதிகாரி. துணை ஆணையராக உள்ளேன், தேர்வு எழுதி ட்ரெய்னிங்கில் இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். தான் புழல் சிறையில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறிய அவர் பெரவள்ளூரில் ஏராளமான இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளார்.

இது தவிர அருகில் உள்ள ஜிம்மில் பயிற்சிக்குச் சேர்ந்து அங்கும் ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். ஜிம் உரிமையாளரும் இவரது பேச்சை நம்பி கட்டணம் வாங்காமலே இருந்துள்ளார். ஒருகட்டத்தில் இவரால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் புகார் அளிக்கவே, பெரவள்ளூர் போலீஸார் பிடித்து விசாரித்ததில் போலி அதிகாரி எனத் தெரிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பால மணிகண்டன்  சில நாட்கள் சும்மா இருந்துவிட்டு மீண்டும் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். அந்த நேரம் சூர்யாவின் 'சிங்கம் 2' படம் வெளியானவுடன் தானும் 'சிங்கம்' சூர்யா போன்று முறுக்கிய மீசையுடன், ஜிம்மில் பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடல் வாகுடன்  காக்கி உடை அணிந்து தனது அடுத்த ஆப்ரேஷனைத் தொடங்கியுள்ளார்.

இம்முறை தனது அத்தனை நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்ட அவர் ஆங்கிலம் பேசுவதில் தனக்குள்ள திறமையைப் பயன்படுத்திக்கொண்டு படித்த இளம்பெண்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். 2014-ம் ஆண்டு பால மணிகண்டனிடம் ஏமாந்த பெண்கள் இவரது தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலத்தை நம்பி தங்களை இழந்துள்ளனர்.

தான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்று பயிற்சியில் இருப்பதாகவும், இடைப்பட்ட காலத்தில் பணத்தேவைக்காக தனக்குத் தெரிந்த தொழில் செய்வதாகவும் கூறி தன்னை நம்பிய பெண்களிடம் நகையைப் பறித்துள்ளார். பின்னர் அவர்களைத் திருமணம் செய்துகொண்டு நகைகளுடன் மாயமாகி விட்டார்.

இப்படி பால மணிகண்டனிடம் ஏமாந்தவர்கள்  9 பெண்கள். இவர்களில்  2 பேர் மருத்துவர்கள், 2 பேர் பொறியாளர்கள். இவ்வாறு ஏமாற்றப்பட்ட அண்ணா நகரைச் சேர்ந்த எம்.பில் பட்டதாரி ஒருவர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளிக்க, அவர் கொடுத்த புகைப்படங்களை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஏற்கெனவே பெரவள்ளூரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து கைதான பால மணிகண்டன்தான் அந்த மோசடி நபர் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை போலீஸார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று நாட்கள் கழித்து கைது செய்தனர். அவர் கைதாகும் வரை 9 பெண்களிடம் திருமணம் செய்து 150 சவரன் நகை, ஒரு கார், பணம் உள்ளிட்டவற்றை ஏமாற்றிப் பறித்துள்ளார். அவரைக் கைது செய்த போலீஸார் சிறையிலடைத்தனர்.

அதன் பின்னர் எங்கு போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் நேற்று கானத்தூரில் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரது கதையைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். திரும்ப திரும்ப ஐபிஎஸ் அதிகாரி வேஷம் போட்டு சிக்குகிறாயே ஏன்? என்று கேட்டபோது, 'அது என் லட்சியம் சார்' என்று போலீஸாரையே திகைக்க வைத்துள்ளார் பால மணிகண்டன்.

பால மணிகண்டனை கைது செய்த போலீஸார் அவர் இடைப்பட்ட காலத்தில் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பயன்படுத்திய புத்தம் புது பொலிரோ ஜீப்பையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x