மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனையால் பக்தர்கள் அச்சம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனையால் பக்தர்கள் அச்சம்!
Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகில் தரிசிக்க வரும் பக்தர்களை பூனை ஒன்று கடிப்பதால், வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே, கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் உள்ளூர் வெளியூர் பக்தர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகே தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சில வாரங்களாக பூனை ஒன்று கடிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதில் விழிப்புணர்வுள்ள பக்தர்கள் வெறி நோய் தடுப்பூசி செலுத்துகின்றனர். மேலும், விழிப்புணர்வு இல்லாத பக்தர்கள் வளர்ப்பு பூனைதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் பூனை கடித்து காயமடைந்த பக்தர் கூறுகையில், “தினமும் அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு அதிகாலையில் கோயிலுக்கு சென்று வன்னி மரத்திடி விநாயகர் கோயில் முன்பு தரிசனம் செய்தபோது கையில் ‘வெடுக்‘ என கடிப்பதுபோல் இருந்தது. திரும்பி பார்த்ததில் பூனை என்று தெரிந்தது. அப்போது அங்கிருந்த மற்ற பக்தர்கள் இதுபோல் இந்த பூனை பலரை கடித்து வருகிறது என்றனர்.

உடனடியாக கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலுள்ள மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு 9 மணிக்குத்தான் டாக்டர் வருவார் எனக் கூறினர். உடனடியாக அங்கிருந்து 7 மணியளவில் புறப்பட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அங்கு பூனை கடித்தாலும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதுவரை 3 தடுப்பூசி போட்டுள்ளேன், நான்காவதாக தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.

இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் உதவி ஆணையர் லோகநாதன் கூறுகையில், கோயிலில் பூனை கடித்து பக்தர்கள் காயமடைந்ததாக எங்களது கவனத்துக்கு வரவில்லை. தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், “வெறிநோய் பாதிப்புள்ள நாய் கடித்தால் மட்டும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இது தவறானது. வளர்ப்பு பூனைகள், வெறிநோய் பாதிப்புள்ள ஆடு, மாடுகள் கடித்தாலும் கட்டாயம் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in