ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைப்பது, கட்டணங்களை உயர்த்துவது வேண்டாம்: ஸ்டாலின்

ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைப்பது, கட்டணங்களை உயர்த்துவது வேண்டாம்: ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “குளிர்சாதன (AC) பெட்டிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.” என பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரயில் கட்டணங்கள் வரும் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படவுள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய ரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!

இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

பிரதமர் மோடியையும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in