படவேடு கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.4 கோடி சொத்து பத்திரம் - பின்புலம் என்ன?

படவேடு ஸ்ரீ  ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்த சொத்து பத்திரங்கள். (உள்படம்) முன்னாள் ராணுவ வீரர் விஜயன்.
படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்த சொத்து பத்திரங்கள். (உள்படம்) முன்னாள் ராணுவ வீரர் விஜயன்.
Updated on
2 min read

திருவண்ணாமலை: படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அடுத்த ஏ.கே.படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(68). முன்னாள் ராணுவ வீரர், இவரது மனைவி கஸ்தூரி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு சுப்புலட்சுமி, ராஜலட்சுமி என 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

விஜயன், கஸ்தூரி தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, கஸ்தூரியின் உறவினர்கள் விஜயனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்து வந்த விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு படவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலுக்கு சென்று, கோயில் உண்டியலில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான தனது 2 வீட்டின் பத்திரத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

அப்போது, கோயில் நிர்வாகத்தினர் விஜயனிடம் விசாரித்த போது, தனது சொத்து பத்திரத்தை உண்டியலில் ரேணுகாம்பாள் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளேன் என கூறியுள்ளார். இதுகுறித்து விஜயனின் குடும்பத்தாரிடம், கோயில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையறிந்த விஜயனின் குடும்பத்தினர் கோயில் நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் போது தான் உண்டியலை திறக்கப்படும். அப்போதுதான் உண்டியலில் உள்ள ஆவணங்கள் குறித்து தெரியவரும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அறநிலைய துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில் நடைபெற்றது.

அப்போது, ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில் மூலவர் அருகே உள்ள உண்டியலை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டபோது, அதில் ஏ.கே.படவேடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயன் காணிக்கையாக செலுத்திய 2 வீட்டு பத்திரங்கள் இருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக உதவி ஆணையர் சண்முக சுந்தரிடம் விசாரித்த போது, "கோயில் உண்டியலில் பத்திரம் காணிக்கையாக வந்துள்ளது. இதனை அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில் ஓப்படைப்போம் . அதன் பின்னர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in