நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 7 அதிகாரிகள் ஜூலை 10-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமாக, கூத்தப்பாக்கத்தில் பல கோடி மதிப்பிலான 6.10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அங்கிருந்து அகற்றி, நிலத்தை மீட்டு, கோயில் வசம் ஒப்படைக்கக் கோரி பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கு வேறு இடம் ஒதுக்கி, நிலத்தை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் 6 மாதங்களுக்குள் ஒப்படைக்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளான வருவாய் துறைச் செயலர் பி.அமுதா, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் எஸ்.மதுமதி, அறநிலையத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அறநிலையத் துறை கடலூர் இணை ஆணையர் ஜெ.பரணிதரன், தேவநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் பள்ளித் தாளாளர் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற வழக்கு தொடர்பாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் 7 பேரும் வரும் ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in