Published : 24 Jun 2025 10:55 PM
Last Updated : 24 Jun 2025 10:55 PM
விழுப்புரம்: தைலாபுரத்தில் இன்று (ஜுன் 24-ம் தேதி) மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சியை பாமக தலைவர் அன்புமணி - சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார்.
பாமக எனும் கட்சியின் அதிகார மையத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி அரசியல், குடும்ப நிகழ்வுகளிலும் எதிரொலித்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சி, தைலாபுரம் இல்லத்தில் இன்று (24-ம் தேதி) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமதாஸின் மகள்கள் காந்தி - பரசுராமன் மற்றும் கவிதா - கணேஷ் குடும்பத்தினர், பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளு பேத்திகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். மேலும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும், ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியிடம் வாழ்த்து பெற்றனர்.
மகள்கள் குடும்பத்தினர் பங்கேற்ற 60-வது திருமண நாள் நிகழ்ச்சியை பாமக தலைவர் அன்புமணி - சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்தது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு திருமண நாளில், காலையிலேயே நேரில் சென்று தாய் தந்தையிடம் அன்புமணி - சவுமியா தம்பதி வாழ்த்து பெறுவது வழக்கமாகும். ஆனால், தந்தை மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், குடும்பமே பிளவுப்பட்டிருப்பது, 60-வது திருமண நாள் நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT