முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Published on

சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 24) கடிதம் எழுதினார்.

அதில், ‘மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 651 இந்திய மீனவர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர்.

மீனவர்களின் பாதுகாப்பு குறித்து தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால் தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். எனவே ஈரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப, மத்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும். இது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும்’ என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in