Last Updated : 24 Jun, 2025 07:53 PM

6  

Published : 24 Jun 2025 07:53 PM
Last Updated : 24 Jun 2025 07:53 PM

மதுரையில்  ஜூலை 10-ல் ஆடு, மாடுகளுக்கு மாநாடு: சீமான் அறிவிப்பு

சீமான் | கோப்புப்படம்

மதுரை: “நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் ஜூலை 10-ம் தேதி ஆடு, மாடுகளுக்கு மாநாடு நடக்கும்,” என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதன் மூலம், திடீரென முருகன் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தல் வருவதால் மாநாடு நடத்தியிருக்கின்றனர். ஆண்டுதோறும் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவார்களா? தேர்தலில் வாக்குகள் வரவில்லை என்றால், மீண்டும் இதுபோன்ற மாநாடுகளை நடத்த மாட்டார்கள்.

விவசாயிகள் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. விவசாயிகள் இதைக் கண்டு தெளிவுற வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமரே அழைத்து பேசுவாரே அவர் போயிருக்காலமே? கடிதம் எழுதுவது காலம் கடத்துவது. திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்துவதையும் நாம் போராடித்தான் பெற வேண்டும்.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் எங்களின் பண்பாட்டுச் செல்வங்கள். எங்களின் உடன் பிறந்தவர்கள். இவற்றை வளர்த்தல் என்பது ஒரு தொழில் அல்ல. அது எங்களின் வாழ்க்கை முறை. விவசாயத்தின் நீட்சி. பால், கறி எல்லாம் ஆந்திரா, ராஜஸ்தானில் இருந்து வருகிறது. எங்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒன்று கால்நடைகள். அறுவடைக்கு திருநாள் வைத்த இனம். ஆடு, மாடுகளுக்கு பண்டிகை வைத்த இனமும் நாங்கள் தான்.

ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடம் இன்றி போய்விட்டது. மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கின்றனர். ஆனால், மலையை வெட்டி எடுக்கின்றனர். ஆடு, மாடுகளுக்கு பேசும் திறன் இன்றி அவற்றுக்காக நான் பேசுகிறேன். அதற்காகத்தான் ஜூலை 10-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில், ஆடு, மாடுகள் மாநாடு நடக்கிறது. அதற்கான இடம் பார்க்கவே தற்போது வந்துள்ளேன். ஆடு, மாடுகளின் உரிமைக்காகவே இம்மாநாடு நடத்த இருக்கிறேன். மேய்ச்சலுக்கு இடம் இன்றி இருப்பதால் அதைப் பெறுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெரிய முருக பக்தர். சித்தர், ஞானி போல் வாழ்ந்தார். அவரது அறையில் தியானம் செய்வதற்கு தனி இடம் உள்ளது. அங்கு நானும் சென்று தியானம் செய்திருக்கிறேன். அவரை பற்றி பவன் கல்யாண் பேசியது மகிழ்ச்சி தான். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிட்ட பெரியார், அண்ணா பற்றிய வீடியோ குறித்து சரியாக தெரியவில்லை. தெரிந்த பின்பு கருத்து சொல்கிறேன்.

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் பாவம் என்பதுதான் என்னுடைய கருத்து. திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். புகழ் பெற்றவர்கள் கூட பயன்படுத்துகின்றனர். அவர் தெரியாமல் சிக்கி கொண்டார். அவருக்காக நான் வருந்துகிறேன். அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த போதைப்பொருள் வராது.

திரையுலகில் மட்டுமின்றி கல்லூரி, பள்ளிகள், வழிபாட்டு தலங்களிலும் கஞ்சா, கொகைன், அபின் போன்ற போதைப் பொருட்கள் நீண்ட நாட்களாக விற்கப்படுகிறது. அரசு நினைத்தால் போதைப் பொருட்களை ஒழிக்கலாம். ஸ்ரீகாந்த் புகழ் பெற்ற நடிகர் என்பதால், அந்தச் செய்தி வெளியாகி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் கைதானதால் போதைப்பொருள் ஒழிந்துவிட போகிறதா? ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒழிக்கலாம்.

எல்லோரும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. கொஞ்சம் பொறுங்கள், கூட்டணி தொடர்பாக பதில் அளிக்கிறேன். பவன் கல்யாண் ஆன்மிகம், வழிபாட்டில் ஆர்வமாக இருக்கிறார். அதனால் மாநாட்டுக்கு அழைத்திருப்பார்கள். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. என்னை அழைத்தால் கூட முருகன், பெருமாள் பற்றி பேசுவேன்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x