வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற கோரிக்கை

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற கோரிக்கை

Published on

சென்னை: “வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை தமிழக அரசு இயற்றினால் மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.” என்று பேராசிரியர் ஏழுமலை தெரிவித்தார்.

நம்நாட்டில் வேளாண் பொருட்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அதற்கான பணிகளை ஆட்சியாளர்கள் முன்னெடுப்பதில்லை. இதற்கிடையே மாம்பழம் உட்பட விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை சரிசெய்வதற்கு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்ற வேண்டுமென கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், பேராசிரியருமான ஏழுமலை கூறியதாவது: “குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான வேளாண் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்றியிருந்தால் விவசாயிகள் தற்போது சாலையில் இறங்கி போராட வேண்டிய நிலை இருக்காது. இதுதொடர்பாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவரது பரிந்துரைகளும் பெறப்பட்டன.

எந்த அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், அதற்கான காரணிகள் என்ன போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன. குறைந்தபட்ச ஆதரவு விலையை கொடுக்காமல் போனால் விவசாய உற்பத்தி குறையும். இதனால் நாம் உணவுப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு தேவையான சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற மறுத்து வருகின்றன. வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தருவது மாநிலப் பட்டியலில் நுழைவு 14-ல் வரையறை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் பிற மாநிலங்களுக்கு மட்டுமல்ல உலகளவில்கூட சில விஷயங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மத்திய அரசுக்கு அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதேபோல், குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுவது விவசாயிகள் அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பானது அது சட்டமாக மாற வழிசெய்யும். அப்படிதான் இந்த உணவு பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் தற்போது சட்டமாக மாறி அது அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டமானது குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டமாக மாற்றப்பட வேண்டும்.” என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in