

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கைலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 20 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் பணியாளர் கனகவள்ளி என்பவர் இன்று காலையில் உணவு தயாரிக்கும் பணியில் வழக்கம்போல ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகவள்ளி அங்கிருந்து வெளியேறி விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கு இடையே ஒரு சிலிண்டரில் பிடித்த தீ அருகில் இருந்த மற்றொரு சிலிண்டர் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மீது பரவி தீ பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கெமிக்கல் நுரையை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.