தொழில் வணிக துறைக்கு தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தொழில் வணிக துறைக்கு தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: தொழில் வணிகத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வான 50 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் வணிகத் துறையானது சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திட்டங்கள், நிறுவனங்களை அமைக்க மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான மானியங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்முனைவோரின் மூலம் தமிழகத்தின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் வழங்கி பங்காற்றி வருகிறது.

தொழில் வணிகத் துறை வாயிலாக கலைஞர் கைவினைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி வாயிலாக 19 இளநிலை உதவியாளர், 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 1 உதவி கண்காணிப்பாளர். 11 உதவி இயக்குநர்கள் 18 உதவி பொறியாளர்கள் 47 உதவியாளர்கள் 34 இளநிலை உதவியாளர்கள், 41 தட்டச்சர்கள் மற்றும் 25 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 177 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் அதுல் ஆனந்த், தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in