Published : 24 Jun 2025 05:46 AM
Last Updated : 24 Jun 2025 05:46 AM
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஒன்று திரண்டு தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை தாங்களே எடுத்து அடுக்கி வைத்ததோடு மாநாட்டு திடலையும் சுத்தம் செய்து, இதுபோன்ற மாநாடு, விழாக்களை நடத்துவோருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பொதுவாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்தும் மாநாடுகள், கூட்டங்கள் முடிந்த பிறகு, மறுநாள் அந்த இடமே உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் நாலாபுறமும் சிதறி சுகாதாரச் சீர்கேடாகவும், குப்பைக் குவியலாகவும் காணப்படும். மாநாட்டில் போடப்பட்டிருந்த இருக்கைகள் தூக்கி வீசியெறியப்பட்டும், உடைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கும்.
இதற்கு விதிவிலக்காக, மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டு கந்த சஷ்டி பாடிய முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம், மறுநாளே மிகத் தூய்மையாக ‘பளிச்’சென்று காணப்படுகிறது. மாநாடு நேற்று முன்தினம், 8.30 மணிக்கு தீபாராதனையுடன் முடிந்தநிலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்து முன்னணியினர், முருக பக்தர்கள், வீட்டுக்கு உடனே புறப்பட்டுச் செல்லாமல் தன்னார்வமாக முன்வந்து, தாங்கள் அமர்ந்த இருக்கைகளை தாங்களே அடுக்கி ஒழுங்குபடுத்தி வைத்தனர்.
தொடர்ந்து மாநாட்டு திடலில் சிதறிக் கிடந்த குப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், சாப்பாட்டு பொட்டலங்களின் கழிவுகளை சேகரித்து, ஒரு இடத்தில் குவித்து வைத்தனர். நேற்று காலை முதல் குவித்து வைத்த குப்பைகளை, பொறுப்பாக வாகனங்களில் ஏற்றி குப்பை கிடங்குக்குக் கொண்டு சென்று கொட்டினர். இதனால் மாநாடு நடந்த இடம் நேற்று பளிச்சென சுத்தமாக இருந்தது.
இதுகுறித்து முருக பக்தரும், வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான ராஜன் கூறும்போது, ‘‘மாநாட்டு திடலுக்கு நேற்று முன்தினம் வரை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக் கானோர் வருகை தந்துள்ளனர். சிகரெட், மது வாசனையை பார்க்கவே முடியவில்லை. காவல் துறையினர் கட்டுப்படுத்தாமலே, எந்த சண்டை, சச்சரவும் இல்லாமல் மாநாடு நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களே போக்குவரத்தைச் சீரமைத்தனர்.
தாங்கள் போட்ட குப்பையை தாங்களே அப்புறப்படுத்தினர். சாலைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளும் நேற்று முன்தினம்இரவே அகற்றப்பட்டன. கடந்த 6 நாட்களாக தங்கள் வசம் வைத்திருந்த அம்மா திடலை சுத்தப்படுத்தி, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT