அரசு பள்ளிகளில் 2,346 ஆசிரியர்கள் நியமனம்: ஜூலைக்குள் நிரப்ப நடவடிக்கை என அமைச்சர் தகவல்

அரசு பள்ளிகளில் 2,346 ஆசிரியர்கள் நியமனம்: ஜூலைக்குள் நிரப்ப நடவடிக்கை என அமைச்சர் தகவல்
Updated on
2 min read

சென்னை: ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் காலையில் நடைபெற்ற கூட்டத்திலும் திருச்சி, பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்ட அதிகாரிகள் பிற்பகல் கூட்டத்திலும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:

பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறந்த நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள். தேர்ச்சி விகிதம் குறைந்த மாவட்டங்களில் காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பி மறைந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு பணிநியமனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

போக்சோ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையை விரைந்து நடத்தி அதன் அறிக்கையை சம்பந்தப்பட்ட இயக்ககத்துக்கு அனுப்ப தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்புகள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனடியாக அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க சமூகநலத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை இறுதிக்குள் 2,346 இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in