“பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை...” - கோவையில் மோகன் பாகவத் பேச்சு 

கோவை பேரூர் மடத்தில் நடந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார் | படம்: ஜெ.மனோகரன்
கோவை பேரூர் மடத்தில் நடந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார் | படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் இன்று (ஜூன் 23) நடந்தது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று, ராமலிங்கேஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி பூஜை செய்தார்.

விழாவில் மோகன் பாகவத் பேசும்போது, “அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் பாரத நாடு சூழப்பட்டுள்ளது . உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது.

சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தற்சார்பு பொருளாதாரம், குடும்பங்களைப் பேணுதல் உள்ளிட்ட சங்கம் மேற்கொள்ளும் 5 முக்கிய பணிகளை, பேரூர் ஆதீனமும் மேற்கொண்டு வருகிறது. இதில் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியம்” என்று அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, பேரூர் படித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தை பார்வையிட்டார்.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு வெள்ளி வேல் மற்றும் சிறிய முருகன் சிலையை வழங்கினர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு, மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேல் வழங்கினார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வேல் வழங்கினார்.

இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர் ராகுல்ராஜா வரவேற்றார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தொடக்க உரையாற்றினார். சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்மயா மிஷன் மித்ரானந்தா ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்தபின்னர், மோகன் பாகவத் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in