கைதிகளை பட்டதாரிகள் ஆக்கும் நல்லாசிரியர்

கைதிகளை பட்டதாரிகள் ஆக்கும் நல்லாசிரியர்
Updated on
2 min read

சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் ஸ்ரீதர்.. எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார் ராஜா.. ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்று பிஹாரில் இருந்து முன்னாள் ஐ.ஜி. நட்ராஜுக்கு தமிழில் கடிதம் எழுதுகிறார் கிரண்குமார்.. மெக்கானிக்கல் தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற பூரிப்பில் சிரிக்கிறார் நேசமணி.. யார் இவர்கள்? எல்லாருமே முன்னாள் மற்றும் இந்நாள் சிறைப் பறவைகள். இவர்களை மாற்றிவர் சா.ராசேந்திரன்.

அமைப்போ அறக்கட்டளையோ எதுவும் இல்லை. உதவிக்கு ஆட்களும் இல்லை. வருமானமும் இல்லை. ஆனாலும் ராசேந்திரன், தனி நபராக இருந்து, 8, 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்த கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டு கிறது. அவர்களில் பலர் இப்போது பட்டதாரிகள். விடுமுறை தவிர மற்ற நாட்களில் இவரை சென்னை புழல் சிறையில் பார்க்கலாம். கைதிகளுக்கு பாடம் சொல்லித்தர இவர் சிறு தொகைகூட பெறு வதில்லை.

கல்வித்துறை பாடத் திட்டங் களை இவர் அப்படியே கற்பிப்பது இல்லை. எறும்பில் ஆரம்பித்து யானை வரை உதாரணம் காட்டி சுற்றுச்சூழலைக் கற்பிக்கிறார். நன்னெறி கதைகளைச் சொல்லி ஒழுக்கத்தைக் கற்பிக்கிறார். பாடம் மட்டுமின்றி, ஓவியம் வரையவும் இவரே சொல்லித் தருகிறார். புழல் சிறையின் சுற்றுச்சுவர்களில் ஜொலிக்கும் அழகிய பெயின்டிங் ஓவியங்கள், இவரது பயிற்சியில் தயாரான கைதிகளின் கைவண்ணமே. மேலும், சிறைக்கைதிகளை வைத்து இசைக்குழுவும் நடத்தி வருகிறார் ராசேந்திரன்.

‘தி இந்து’வுக்காக அவரிடம் பேசினோம்..

அடிப்படையில் நான் பெரியார் கொள்கைவாதி. யாரும் செய்ய முன்வராத நல்ல காரியங்களை செய்வதில் ஆர்வம் கொண்டவன். மூடநம்பிக்கைகளை எதிர்த்து சுயமரியாதைத் திருமணம் செய்ய முயன்றபோது, ஊருக்கு ஆபத்து வந்துவிடும் என்று மொத்த பேரும் திரண்டு எதிர்த்தனர். ஆனால், உறுதியாக நின்று திருமணம் செய்தேன். அப்படித்தான் 2007-ம் ஆண்டு அறிவொளி இயக்கம் - வளர்கல்வி திட்டத்தின் கீழ் சிறைகளில் இருக்கும் கைதி களுக்கு இலவசமாக பாடம் சொல்லித்தர ஆரம்பித்தேன்.

எந்த கைதியிடமும் அவரது குற்றப்பின்னணி பற்றி கேட்க மாட்டேன். அவர்களின் நடத்தை, பழக்க வழக்கங்களை வைத்து சூழ்நிலை காரணமாக குற்றம் செய்திருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

கடந்த 7 ஆண்டுகளாக புழல் சிறையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன். 8, 10, 12-ம் வகுப்பு பாடங்கள் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான அடிப்படை மொழிக் கல்வி ஆகி யவற்றை சொல்லித் தருவேன். மதியத்துக்கு மேல் கைதிகள் தேர்வு எழுதுவதற்கான அரசு நடைமுறைகள், மதிப்பெண் சான்றிதழ் வாங்குவது போன்ற பணிகளை கவனித்துக் கொள் வேன்.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இங்கு படித்த 102 பேரும், 12-ம் வகுப்பில் 56 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஒரு சிலர் மட்டுமே குறைந்த மதிப்பெண் பெற்றனர். பாபநாசம் என்பவர் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் 417. அல்-உம்மா வழக்கில் கைதியாக இருக்கும் ராஜா உசேன் பெற்ற மதிப்பெண் 405; நாகராஜ் 395 மதிப்பெண். ஒவ்வொரு வகுப்பிலும் 5 முறை கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார் பெருமிதத்துடன் ராசேந்திரன்.

இவரிடம் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் பலர், சிறையில் இருந்து வெளியே வந்ததும் பட்டம் பயின்று கவுரமான வேலைகளில் இருக்கின்றனர். “இத்தனை பேருக்கு கல்வி கற்பிக்க செலவுக்கு என்ன செய்கிறீர்கள்’’ என்று கேட்டால், “புத்தகங்களை சிறை நிர்வாகம் வழங்குகிறது. 2 கருப்பு சட்டை, 2 வேட்டி, 2 வேளை உணவு... இதுதான் என் தேவைகள். குடும்ப செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வெளியே செய்தி நிறுவனங்களுக்காக சிறு வேலைகளை செய்துவருகிறேன். வேறென்ன செலவு எனக்கு” என்கிறார் எளிமையாக.

கைதிகளை பட்டதாரிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் ராசேந் திரன், அடிப்படையில் ஆசிரியர் அல்ல. ஆர்வமும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ண மும்தான் இவரை ஆசிரியராக ஆக்கியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in