Published : 23 Jun 2025 12:14 PM
Last Updated : 23 Jun 2025 12:14 PM
சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். அவரது பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தது. வழக்கு விசாரணைக்காக ஹெச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீமன்றத்தில் ஹெச்.ராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நோட்டீஸை ரத்து செய்ய முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT