மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ல் சிறப்பு முகாம்கள்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
Updated on
1 min read

தூத்துக்குடி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 20 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறியதாவது:

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித்தனியாக நலவாரியங்கள் உள்ளன. இதில் இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. நலவாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க வேண்டும், கருவிழி பதிவு செய்ய வேண்டும் என்பது, மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும். மத்திய அரசின் திட்டம் மூலம் பணம் பெறும் அனைத்துக்கும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையால்தான் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in