Last Updated : 22 Jun, 2025 09:03 PM

23  

Published : 22 Jun 2025 09:03 PM
Last Updated : 22 Jun 2025 09:03 PM

''கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது'' - பவன் கல்யாண் ஆவேசம்

மதுரை: "கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்து மதத்தை கேலி செய்யும் அவர்களால் மற்ற மதங்களை கேலி செய்ய முடியுமா" என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்து முன்னணி சார்பில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், "என்னை மதுரைக்கு வர வழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன்.

மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் அறுபடை வீடும் கடைசி அறுபடை வீடும் மதுரையில்தான் உள்ளது. மதுரை என்பது மீனாட்சி அம்மனின் பட்டிணம். மீனாட்சி அம்மன், தாய் பார்வதியின் அம்சம். எனவே, முருகனின் தாயாரும் மதுரையில்தான் உள்ளார்.

முருகனின் தந்தை சிவபெருமான், முதல் தமிழ்ச்சங்கத்தை தலைமையேற்று நடத்தியவர். எனவே, மதுரையில், தாயும், தந்தையும் மகனும் இருக்கிறார்கள். அப்படி எனில், மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அந்த புண்ணியத்தின் விளைவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இங்கு அவதரித்தார். அவர் முருகனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

இன்று, மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் குங்குமம் கிடைக்கிறது, பிரசாதங்கள் கிடைக்கின்றன. ஆனால், இந்த தலைமுறைக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்லப் போகிறேன்.

ஒரு காலத்தில் மதுரையே இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஒளி இல்லை. நமக்கு குங்குமம் கொடுக்கும் மீனாட்சி அம்மன் ஆலையத்தில் குங்குமம் கொடுக்க யாரும் இல்லை. ஆலயமே பொலிவிழந்து காணப்பட்டது. கோயில் நொறுங்கிப் போய் இருந்தது.

ஏன் தெரியுமா?, 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக் கபூர் மதுரையை கொள்ளையடித்தான். அதன்பிறகு 60 வருடங்களுக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் விளக்கு எரியவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம்.

14ம் நூற்றாண்டின் முடிவில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார் விஜயநகர இளவரசர் குமார கம்பணன். இதில் இருந்து என்ன தெரிகிறது?

நமது நாட்டு நம்பிக்கைக்கு அழிவில்லை. அதர்மிகள் யாராலும் அதை அழிக்க முடியாது. நமது கலாச்சாரம் மிகவும் ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. அது இன்றும் ஆழமாக இருக்கிறது. இனியும் ஆழமாக இருக்கும். இதுதான் இந்த தெய்வீக பூமியின் பலம்.

முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து தழைக்கிறது. அறம் என்பது என்ன? உலகை தீய்மை சூழும்போது, அதை அறுப்பதே அறம். எல்லோரையும் சமமாகப் பார்ப்பது அறம். தீயவர்களை வதம் செய்வது அறம். அதன் பெயரே புரட்சி. அதை செய்பவரே புரட்சித் தலைவர். எனவே, உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப் பெருமான்.

நாம் எல்லோரும் இங்கு வந்திருப்பது ஒரே ஒரு கடவுளுக்காக. புரட்சித் தலைவர் முருகப் பெருமானுக்காக. உலகின் முதல் புரட்சித் தலைவருக்காக. அநீதிழை அழித்ததால் அவர் புரட்சித் தலைவர். சமமாக நடத்தியதால் அவர் புரட்சித் தலைவர்.

முருகன் மாநாட்டை, உத்தரப் பிரதேசத்தில், குஜராத்தில் நடத்த வேண்டியதுதானே, ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள் என ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார். இதன்மூலம் அவர் பிரிவினை செய்யப் பார்க்கிறார். இன்று முருகனைப் பார்த்து கேட்பவர்கள், நாளை சிவபெருமானைப் பார்த்துக் கேட்கலாம், அம்மனைப் பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது.

இந்த சிந்தனை நீண்ட காலமாக இருக்கிறது. நான் 14வது வயதில் சபரிமலைக்குப் போனவன். தைப்பூசத்துக்கு மக்கள் திருத்தணிக்குப் போவதைப் பார்த்தவன். நான் சென்னை மைலாப்பூரில் படித்தபோது நெற்றியில் வீபூதி பட்டையுடன் பள்ளிக்குச் சென்றவன். சிறிது காலத்தில் மாற்றம் தெரிந்தது. நெற்றியில் வீபூதி பூசுவதைக் கேள்வி கேட்டார்கள். எனவே, எனது 14வது வயதிலேயே இந்த விதமான கேள்விகளை எதிர்கொண்டவன் நான்.

எல்லோருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும். நாம் அதை பெரிதுபடுத்துவதில்லை. காரணம், இந்துக்களாகிய நாம் மதச்சார்பற்றவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம். ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்குப் பிரச்சினை. ஒருவன் இந்துவாக இருந்துவிட்டால் அவன் மதவாதி. இதுதான் இவர்களது போலி மதச்சார்பின்மை.

என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதை கேள்வி கேட்க நீங்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்க வில்லை. அதே நாகரீகத்தை நீங்கள் கடைப்பிடியுங்கள்.

என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமரியாதை செய்யாதீர்கள். முருகனைப் பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்துவந்திருக்கும் நம்பிக்கையை உங்களால் கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா? அதனால்தான் சொல்கிறேன். சீண்டிப்பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.

முருகன் தமிழ் கடவுள். ஆனால், அவர் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். வட இந்தியாவில் கார்த்தியேராக, ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சுப்ரமணியராக, தமிழ்நாட்டில் முருகராக இருக்கிறார். முருகப் பெருமான் உலகம் முழுவதும் பரந்து இருந்தாலும் அவரது பாதம் தமிழ்நாட்டில் ஊன்றி இருக்கிறது. எனவே, அவரது மண்ணை வணங்குகிறேன். அதனால்தான் முருகப்பெருமானுக்கு மதுரையில் மாநாடு நடக்கிறது.

சிலர் இங்கு நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ண பகவான் கருப்பு. காளி மாதா கருப்பு. நாம் நிறத்தின் வழியாகப் பார்ப்பதில்லை. அகத்தின் வழியாகப் பார்க்கிறோம். ஆனால், இங்கு கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது. நம்மை இணைக்கும் முருகனை சீண்டிப்பார்க்கிறது ஒரு கூட்டம். கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை ஜனநாயகம் கொடுத்துள்ளது.

அவர்கள் என் கடவுளை, என் கலாச்சாரத்தை, என் பண்பாட்டை, என் பார்வையை கேலி செய்தார்கள். கேட்டால், இதுதான் மதச்சார்பின்மை என்பார்கள். மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப் படுத்த அவர்கள் யார்? முருகனை கேள்வி கேட்க அவர்கள் யார்? அறத்தை அசைத்துப் பார்க்க அவர்கள் யார்? அவர்களால் மற்ற மதங்களைப் பற்றி இதுபோல் பேச முடியுமா? அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் பற்றி அவர்களால் இப்படி பேச முடியுமா? நம் மதத்தைப் பற்றி மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள்.

ஏனெனில், நாம் அமைதியானவர்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளக்கூடியவர்கள். மீனாட்சி அம்மன் கோயில் 60 ஆண்டுகள் மூடப்பட்டு இருந்தபோதும் பார்த்துக்கொண்டுதானே இருந்தோம். அந்த துணிச்சலால் பேசுகிறார்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல.

இங்குள்ள முருகப் பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தலே போதும், நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும். சிவபெருமான் நெற்றக் கண்ணைத் திறந்த பூமி இது. இன்று இந்த கூட்டம் வரும். நாளை இன்னொரு கூட்டம் வரும். எத்தனை நாள் பொறுப்பது.

முருகனைப் பற்றி இழிவாகப் பேசினால் உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா? நீங்கள் துடிக்க வேண்டாமா? பதற வேண்டாமா? நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால், நம்மை காப்பாற்றுவதற்காக நாம் நமது கைமாறை செய்ய வேண்டமா? நன்றியை சொல்ல வேண்டாமா? இந்த மாநாட்டில், இப்போதே ஒரு முடிவுக்கு வருவோம். எப்படி மின்னல் கண்களை குருடாக்குமோ, எப்படி காற்றாட்டு வெள்ளம் கரைகளை உடைக்குமோ, அதுபோல பொங்குவோம்.

நான் உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். அநீதியை தட்டிக்கேட்க திரளுவோம். அறத்தைக் காக்க அனைவரும் எழுவோம். முருகன் நீதியை காப்பாற்ற புறப்படுவோம். இந்த முருகன் படை, எதிர்த்து நிற்கும் கூட்டத்தை தகர்க்கும். இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்." என பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x