Published : 22 Jun 2025 07:10 PM
Last Updated : 22 Jun 2025 07:10 PM

''தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவும்'' - இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு

மதுரை: “தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகரமாக இருக்கும்,” என்று முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.

தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றம் மலை பின்னணியில் முருகனின் முழு உருவ கட்வுட், அறுபடை வீடுகள் அடங்கிய வடிவில் திறந்த வெளி மாநாட்டு மேடை அமைக்கபட்டிருந்தது. இதற்கு பக்கத்தில் சாதுக்களுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டுக்கு இன்று அதிகாலையில் இருந்தே மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வரத்தொடங்கினர். வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏராளமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்தன. போலீஸார் ஆங்காங்கே பூத்கள் அமைத்து வாகனங்களின் பதிவெண்களை பதிவு செய்த பிறகே மாநாட்டு திடலுக்கு அனுமதித்தனர். மாநாடு திடல் அமைந்திருக்கும் பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இச்சாலையில் மாநாட்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

4 மணிக்கு மேல் ‘ஐந்து கரத்தனை’ என்ற சிறுவன் பாடிய விநாயகர் பாடலுடன் மாநாடு தொடங்கியது. இந்து முன்னணி நிர்வாகிகளும், சந்நியாசிகளும் தொடர்ந்து அடுத்தடுத்து பேசினர். இடையிடையே ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தன. மாநாட்டில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது: “மதுரை முருக பக்தர்கள் மாநாடு நடக்கக்கூடாது என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது. அவர் விரதம் இருப்பது மூலமாவது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. இம்மாநாடுக்கு விளம்பரம் செய்வது பற்றி யோசித்துபோது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வைகோ, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மாநாடு பற்றி பேசி அதிக விளம்பரம் தேடி கொடுத்தனர்.

இந்த மாநாட்டுக்கு உழைத்த நமது அமைப்பினருக்கு வாழ்த்து சொல்லவேண்டியதில்லை. அவர்களும் எதிர்பார்ப்பதில்லை. மாநாட்டுக்கு விளம்பரம் தேடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். இந்த மாநாட்டுக்கு எதற்குகாக ஆந்திராவில் இருந்து துணை முதல்வர் வரவேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். அவர் ரூ. 400 கோடியில் மாநாடு நடத்த போகிறோம் என கூறுகிறார். இப்பணம் எங்கிருந்து வந்தது என சொல்லவேண்டும். அவரது அப்பா அல்லது தமிழக முதல்வர், அறநிலைய கோயில் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறதா என, கணக்கு கொடுக்க வேண்டும். நாங்கள் இம்மாநாட்டுக்குரிய செலவு கணக்குகளை கொடுக்க தயாராக இருக்கிறோம். நீங்களும் வெளியிட தயாராக இருக்கவேண்டும்.

சென்னிமலையை மாற்றுவோம் என, சொன்னார்கள். முருகனுக்கு கோபம் வந்தது. நீதிமன்றத்தில் நீதி வென்றது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு மணி நேரத்தில் அதிகமான கூட்டத்தை கூட்டினோம். அது போன்று முருக பக்தர் மாநாட்டை தடை செய்ய மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியாக நீதிமன்றம் சென்று மாநாட்டை நடத்துகிறோம். நமது கணக்குபடி சுமார் 7 லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இது கடலா, கடல் அலையா என்ற அளவில் கூட்டம் சேர்த்துள்ளனர். இது முருக பக்தர்கள் மாநாடு. அரசியல் மாநாடு அல்ல. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல.

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மீது தீவிரவாதிகள் இங்குதான் தாக்கினர். அன்னை மீனாட்சியின் அருளால் அவர் உயிர் பிழைத்தார். இந்து முன்னணி மாநில நிர்வாகி ராஜகோபால் இங்கு வெட்டுபட்டு இறந்தார். அவர்களது ஆசியால் இந்த மாநாடு வெற்றி பெற்றுள்ளது. இவர்களைப் போன்று நிறைய பேரை தியாகம் செய்துள்ளோம். தமிழகத்தில் ஆன்மிகம் வளர்ந்துள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றனர். அனைத்து கட்சிகளுக்கும் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தோம்.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு கொடுத்தோம். அவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பிரதிநிதிகளாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்பி உதயக்குமார் வந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறோம்.

தமிழக முதல்வரை அழைப்பீர்களா என, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்டனர். முதல்வருக்கும் கடிதம் எழுதினோம். நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ் வழங்க நேரம் கேட்டபோது, அதற்கு இதுவரையில் அவர் பதிலளிக்கவில்லை. ஒருவேளை அவர் நேரில் வந்து இருந்தால் மாநாட்டு மேடையில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்துகளுக்கு ஆதரவாக பெருமை பேசும் மாநாடு இது. சனாதனத்தை பேசினால் சந்நியாசிகள் ஒன்றாகவேண்டும். அவர்களுக்கு பின்னால் இந்து முன்னணி இருக்கும். தமிழகத்தில் ஆன்மீக புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகரமாக இருக்கும். இவ்வாறு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.

- கி. மகாராஜன்/ என். சன்னாசி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x