Last Updated : 22 Jun, 2025 03:06 PM

20  

Published : 22 Jun 2025 03:06 PM
Last Updated : 22 Jun 2025 03:06 PM

''முருகப்பெருமான் முதல்வர் பக்கம் இருக்கிறார்'' - அமைச்சர் சேகர்பாபு

சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயில் குளத்தின் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்

சென்னை: “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை இன்று (ஜூன் 22) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்க கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. எந்த ஆட்சியிலும் அனைத்துலக முத்தமிழ் முருகன் பக்தர் மாநாடு நடத்தப்படவில்லை. வருகின்ற ஜூலை 7ம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெறும் திருச்செந்தூர் கோயிலுக்கு ரூ.400 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்பட 117 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

பெருந்திட்ட வரைவு பணிகளின் கீழ் பழனியில் 98 கோடி ரூபாய் செலவிலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.86 கோடி செலவிலும் பணிகள் நடைபெற்று வருவதோடு, சுவாமிமலையில் ரூ.5 கோடி செலவில் மின்தூக்கி அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2,000 மூத்தக் குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டதை போல் இந்தாண்டும் 2,000 நபர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் கோயில்களுக்கு ரூபாய் 1085 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி இந்த ஆட்சியில் தான் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமைக்கு பெருமை சேர்த்து இருக்கின்றோம். ஆகவே முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்வர் பக்கத்தில் இருக்கின்றார்.

எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு. நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் அறம் சார்ந்த பணிகள், பக்தர்களுக்கு தேவையான பணிகள், ஆன்மிகப் பணிகள். ஆகவே இறைவன் இரண்டையும் பகுத்துப் பார்க்கின்ற ஆற்றல் பெற்றவர். நிச்சயமாக இது போன்ற போலியான நடவடிக்கைகளுக்கு இறைவன் எந்நாளும் துணை இருக்க மாட்டார்.

முருக பக்தர்கள் மாத்திரமல்ல ஆன்மிகம் சார்ந்த இறை அன்பர்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. மேலும், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் ரூ.1,060 கோடியை அரசு நிதியாக வழங்கியிருக்கின்றார். இன்றைய முருகன் மாநாட்டுக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அரசின் சார்பில் துறைக்கு மானியமாக எவ்வளவு கோடியை ஒதுக்கி தந்தார் என்பதை செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியாக கேளுங்கள்.

திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு பணிகளை அந்த மாவட்டத்தின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, துறையினுடைய அமைச்சர் நானும், துறை செயலாளர், ஆணையர், தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் என அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு திருச்செந்தூரில் ஆய்வுக் கூட்டம் நடத்தி பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். மீண்டும் வரும் 27ம் தேதிக்குள் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். குடமுழுக்குக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x