Published : 22 Jun 2025 01:59 PM
Last Updated : 22 Jun 2025 01:59 PM

ஆரிய கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

வைகோ | கோப்புப் படம்

தமிழகத்தில் ஆரிய கலாச்சாரத்தை திணிக்க, மத்தியில் ஆளும் பாஜக முயன்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

ஈரோட்டில் இன்று நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமையில், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ஈரோட்டில் இன்று நடைபெறவுள்ள மதிமுகவின் 31-வது பொதுக்குழுவில் எடுக்கப்படும் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும். வரும் தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்பது குறித்து தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிந்து கொள்வீர்கள். ஆங்கில மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். ஆங்கிலம் என்றும் உலக மொழி. ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வளரலாம். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே பாஜக தீவிரமாக இருக்கின்றனர்.

2017-ம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்தக் கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இப்போது இல்லை. கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கு நிகராக இருக்கின்றன. அதேபோல் வரிசையான வீடுகள், கழிவுநீர் கால்வாய்கள் போன்றவற்றுக்கான ஆதாரங்களை ராமகிருஷ்ணா முதலிலேயே வெளியிட்டுள்ளார்.

அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய மத்திய அரசு வேண்டுமென்று, இன்னும் துல்லியமாக ஆராய வேண்டும் என்று கூறி குழப்பி வருகிறது. இவர்கள் ஆரிய கலாச்சாரத்தை இங்கு திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதால் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகமாக வாழ்ந்தார்கள் என்ற சான்றுகள் கிடைப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x