வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று காலமானார்.

அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த இவருக்கு மனைவி கலைச்செல்வி, மகள் சுபநிதி உள்ளனர். 1980-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த அமுல் கந்தசாமிக்கு கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவானார். தொடர்ந்து, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அமுல் கந்தசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கட்சி மீதும், தலைமை மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அமுல் கந்தசாமி, கட்சிப் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in