முதல்வர், அமைச்சர்களுக்கு கொடுக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக வழக்கு

முதல்வர், அமைச்சர்களுக்கு கொடுக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக வழக்கு
Updated on
1 min read

தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கட்டிங் கொடுக்க வேண்டுமெனக்கூறி குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.ஆர்.குகேஷ் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் கனிமவளம் மற்றும் புவியியல் துறையிடமிருந்து முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற்று மணல், கல், கிராவல் குவாரிகளை நடத்தி வருகிறோம். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராமச்சந்திரன், குவாரி உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி நடத்துபவர்களிடம் 70 சதவீதமும் பட்டா நிலத்தில் கிராவல், மணல் குவாரிகளை நடத்துபவர்களிடம் 40 முதல் 55 சதவீதமும் பணம் வசூலித்து வருகிறார்.

இதுதொடர்பாக கனிமவளம், புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இவ்வாறு ராமச்சந்திரன் மூலமாக வசூலிக்கப்படும் பெரும் தொகையில் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டிங் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். அரசின் விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்குட்பட்டு குவாரி நடத்தும் உரிமையாளர்களிடம் இவ்வாறு தனிநபர்கள் மிரட்டி பணம் வசூலிக்க எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்காதபோது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயரில் நடைபெறும் மிகப்பெரிய அளவிலான பணவசூலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் கடந்த பிப்.13 அன்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக தகுந்த உத்தரவை தமிழக அரசுக்கு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது தங்களது சங்க உறுப்பினர்களிடம் கட்டாய பணம் வசூலில் ஈடுபடும் புதுக்கோட்டை ராமச்சந்திரன் மீது ஏற்கெனவே சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான புகார்கள் உள்ளதாகவும் அவர் மீது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்திருந்ததாகவும், தற்போது அவரும் கனிமவளத் துறை அதிகாரிகளும் கூட்டணி அமைத்து செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால் இதுதொடர்பாக தமிழக அரசும் கனிமவளத்துறை, புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-க்கு தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in