அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுடன் இணைந்து யோக பயிற்சியில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களுடன் இணைந்து யோக பயிற்சியில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

Published on

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை சார்பில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் யோகா தினம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துறை செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவத் துறை மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், நோயாளிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உடலை தூய்மையாக்குகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஆக்குவது மட்டுமல்லாமல் தனி மனிதன் ஆயுளை நீட்டிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திகளை கூடுதல் ஆக்குவதற்கு யோகா பெரிய அளவில் உதவுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக யோகா மருத்துவ கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழகம்தான். வரும் 30-ம் தேதி 59 சித்த மருத்துவர்கள் என 171 பேருக்கு பணி ஆனைகளை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.

சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டப்பேரவையில் அந்த மசோதா திரும்ப பெற்று கொள்ளப்பட்டது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான கட்டமைப்புகள் முடிந்து, இதே வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் அலுவலகம் தயாராக உள்ளது. சென்னை மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்து தயாராக உள்ளது.

சித்த பல்கலைக்கழக மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும். தமிழகத்தில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியம் சதவீதமாக உள்ளது. எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. போதை பொருட்களை விற்கும் சமூக விரோதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், மிகப்பெரிய தண்டனைக்கு உள்ளாக்கி சிறையில் அடைப்பது தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in