Last Updated : 21 Jun, 2025 12:03 PM

20  

Published : 21 Jun 2025 12:03 PM
Last Updated : 21 Jun 2025 12:03 PM

‘தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான்’ - நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: கீழடியை மட்டுமே வைத்து திமுக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐநா சபை சென்றாலும் சரி தமிழை பிரதமர் மோடி பெருமைப் படுத்தி வருகிறார். தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பாஜகவினரும் கலந்து கொள்கிறோம். கட்சி பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கடுமையான நெருக்கடி தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை, நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது வரவேற்க கூடிய விஷயம்.

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத் தான் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு திட்டமாக அதனை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் பணத்தை மாநில அரசு கொடுப்பதை போல் கொடுக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கரை ஒட்டி தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.

உலகத்தில் சிறந்த மொழி, மூத்த மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை வைத்து தமிழக அரசு வியாபாரம் செய்து வருகிறது. ஐந்தாண்டு ஆட்சி முடிய போகிறது. 2500 முகாம்கள் நடத்தி 12 லட்சம் மனுக்களை பெற்று தீர்வு கண்டதாக சொல்கிறார்கள். ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை.

கீழடியை மட்டுமே வைத்து திமுக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐநா சபை சென்றாலும் சரி தமிழை பிரதமர் மோடி பெருமைப் படுத்தி வருகிறார். தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான்.

திமுக கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். கூட்டணியில் சீட்டு குறித்து பிரச்சினை இல்லை, கூட்டணியில் தொடர்வோம் என திருமாவளவன் சொல்கிறார். அப்படி என்றால் ஏதோ பிரச்சினை உள்ளது என்பதை காட்டுகிறது. திமுக இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?. நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாத கால அவகாசம் உள்ளது. பாஜக கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே ஆளுங்கட்சி தமிழக மக்களுக்கு என்னென்ன செய்துள்ளது என்பதை தெளிவுபடுத்தி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியின் கூட்டணி குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது ‘புலி வருது புலி வருது’ என சொல்வதை போல் உள்ளது. பிரதமர் வந்து தமிழகத்தில் பார்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பார்த்துக் கொள்வார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x