பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உட்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் என்று பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள், சுகாதார அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், முதியோர் - குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உரிய முறையில் சுகாதாரம் பேணப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் நோக்கில் அரசு சார்பில் சுகாதார சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இணைய சேவை வழியாக சான்றிதழ் பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

சுகாதார சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள், சுய உறுதிமொழி சான்றிதழ் ஆகியவற்றையும் இணைய வழியே சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கணினியில் சுகாதார சான்றிதழ் உருவாக்கப்படும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அந்த சான்றிதழை அச்சு பிரதி எடுத்து, தொழில், கல்வி வளாகத்தில் காட்சிப்படுத்துவது அவசியம். சுகாதார சான்றிதழில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டால், சான்றிதழ் ரத்து செய்யப்படும். இனி வரும் காலங்களில், நேரடியாக சுகாதார சான்றிதழ் வழங்கும் நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in