Last Updated : 21 Jun, 2025 05:27 AM

14  

Published : 21 Jun 2025 05:27 AM
Last Updated : 21 Jun 2025 05:27 AM

அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களுக்கு மக்கள் படையெடுப்பு | மதுரை முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் தரிசனம் செய்ய கூடிய பக்தர்கள் கூட்டம். | படம்: நா.தங்கரத்தினம் |

மதுரை: மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது.

மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப் பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள், சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர், சாய்பாபா பக்தர்கள், ஆன்மிகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர்.

முன்பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிறுவர், சிறுமிகள் முருகன் வேடம் அணிந்து வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தினமும் மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பக்தர்கள் கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்துவதுடன் பக்தர்களுக்கு தண்ணீர், பிரசாதம் வழங்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து முருக பக்தர்கள் கூறுகையில், ‘மதுரையில் ஒரே இடத்தில் அறுபடை வீடுகள் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் முருகனின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களுக்குள் சென்றதும் உண்மையான கோயில்களுக்குள் சென்ற உணர்வு ஏற்படுகிறது’’ என்றார். இந்து முன்னணியினர் கூறும்போது, ‘‘முருகனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

இதற்காக அறுபடை வீடுகளின் பின்பகுதியில் 8 லட்சம் சதுர அடிபரப்பளவில் மேடை, இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசமும், திருப்புகழ், முருகன் பாடல்கள் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை: இதற்கிடையே, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் பாஸ் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளின் பேரில் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் வாகன பாஸ் உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி, ‘வாகனபாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் போலீஸார் பாஸ் வழங்க வேண்டும். பாஸ் வழங்க மறுத்தால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். இதையடுத்து கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா வாகனங்களுக்கு இ- பாஸ் வழங்குவது போல் இ-பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி, இ- பாஸ் வழங்க உத்தரவிட முடியாது. ஜூன் 21 காலை 10 மணி வரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதையடுத்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு விசாரித்தது. இந்து முன்னணி வழக்கறிஞர் வாதிடுகையில், ‘அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்று எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை’ என்றார். அரசு தரப்பில், ‘இந்த நிபந்தனை மாநாட்டுக்கு வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்படவில்லை.

முறைப்படுத்தும் நோக்கத்தில் தான் விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘அனைத்து அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கும் இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படு கின்றனவா? முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை சரிபார்த்து பாஸ் வழங்கலாம்’ என்றனர்.

அதற்கு அரசு தரப்பில், ‘அனைத்து அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கும் வாகன பாஸ் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் வாகனங்கள் மாநாட்டுக்குள் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களின் வாகனக் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநரின் ஆதார் அட்டை, வாகன பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களை போலீஸ் பூத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதைப் பதிவு செய்து மாநாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x