

விருதுநகர்: ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் இன்று புகார் அளித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கார்ட்டூன் உருவத்தைக் கேலி செய்யும் வகையில் சித்தரித்து திமுக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக தலைவர் விஜய குமரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணனிடம் இன்று தனித்தனியே புகார் அளித்தனர்.
அதில், ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவரின் கண்ணியத்தையும் மாண்பையும் பதவியையும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் வகையில் ஆபாசமான அரை நிர்வாண கோலத்தில் இருக்கக் கூடிய ஒரு கேலிச் சித்திரத்தைப் பொய்யான செய்தியுடன் இணைத்துப் பதிவிட்டுள்ளனர். இது அவரின் நற்பெயருக்குக் களங்கும் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது.
மேலும், அதிமுக கொடியை அவமதிக்கும் வகையிலும் எக்ஸ் தளத்தில் தவறாகப் பயன்படுத்தி கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளனர். இந்த அவதூறு பதிவினை எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்ட திமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா மீதும், இதைப் பகிர்ந்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி புகார் அளித்தனர்.