Published : 02 Jul 2018 08:36 AM
Last Updated : 02 Jul 2018 08:36 AM

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு கூடுதல் நஷ்டஈடு தர அரசு நடவடிக்கை எடுப்பதாக இல.கணேசன் தகவல்; திட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தலைவர்கள் கருத்து

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு, தேவைக்கும் அதிகமான நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பாஜக எம்.பி.யான இல.கணேசன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை 90 சதவீதம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பசுமை நிலங்கள் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனாலும் நில உரிமையாளர்களுக்குத் தேவைக்கு அதிகமான நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரையில் கூறியதாவது: சேலம் - சென்னை இடையே அமைக்கப்படும் பசுமை வழிச் சாலையால் அரை மணி நேரம் விரைவாகப் போக முடியும் என்பது மட்டுமே அரசின் மையக் கருத்து. தற்போதைய நான்குவழிச் சாலையை ஒழுங்காக அமைத்தாலே போதும், விரைவில் போகலாம்.

சாலை அமைக்கும்போது, விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் அமைக்க வேண்டும். 1000 ஏக்கர் நிலம், ஏரி, குளம், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து சாலைகள் அமைப்பதால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. மக்களை மிரட்டி நிலங்களைப் பெற முயற்சிக்கக் கூடாது. இதனால்தான் அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்க்கின்றன என்றார்.

தினகரன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியது: 8 வழிச் சாலை திட்டம் மக்கள் கேட்டு வரும் திட்டமில்லை. அரசு திணிக்கும் திட்டம். எனவே, திட்டத்தை எதிர்ப்பவர்களை முதல்வர் சந்தித்து, அவர்களின் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும். அதை விடுத்து, போலீஸாரை கொண்டு மிரட்டக்கூடாது.

மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்

மதுரை விமான நிலையத்தில் மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் கஜேந்திரசிங் கூறியதாவது: நாட்டின் அடிப்படை வசதிக்கு பசுமை வழிச்சாலை அவசியம். இதனால் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.

பசுமை வழிச்சாலை அமைக்கவே நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. பிரதமர் மோடி தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய வளர்ச்சி, அவர்களது நலனை அடிப்படையாகக் கொண்டு பணியாற்றுகிறார் என்றார்.

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடியில் கூறியது: சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அடுத்த போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டம் வேண்டுமா?, வேண்டாமா என மக்களின் கருத்தை கேட்டு, அந்த முடிவுப்படிதான் திட்டத்தை கொண்டு வரவேண்டும்.இந்த சாலை முக்கியமா? என்பதை அப்பகுதி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேற்றினால் எந்த திட்டத்தையும் வரவேற்போம். அதேநேரத்தில் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழகம் முன்னேறுவதில் மிகப்பெரிய கேள்விக்குறி ஏற்படும் என்றார்.

தமிழிசை சவுந்திரராஜன்

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தூத்துக்குடியில் கூறியது: சென்னை- சேலம் 8 வழிச்சாலை பற்றிய விழிப்புணர்வு தேவை என்பது எனது கருத்து. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த திட்டத்தால் வாகன நெரிசல் குறையும். எனவே, இந்த பசுமைவழிச் சாலை தமிழகத்துக்கு மிகவும் பயனுள்ளது. ஆனால், வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள், வேண்டுமென்றே இதற்கு எதிராக கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

திருமாவளவன்

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியது: சேலம் 8 வழிச்சாலையை எதிர்ப்பவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு அடக்குமுறை சட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது. இந்தப் போக்கை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் கூறியது: சேலம்- சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைப்பதில் அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அரசு, மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டுமேயொழிய, ஒரு முடிவை எடுத்துவிட்டு மக்கள் தலையில் சுமையாக வைக்கக் கூடாது. இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை வரும் 8-ம் தேதி சந்தித்து பேசவுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x