கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மனைப்பிரிவு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் உள்ள இடங்களில், அவற்றின் திட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், தங்களது குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, நில மேம்பாட்டாளர்கள் மனைப் பிரிவு திட்டங்களை அறிவித்து, விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்கள், உயரமான கட்டிடங்கள் என பொதுமக்கள் பார்வையில்படும் இடங்களில் திட்டங்கள் தொடர்பான விளம்பரப்பதாகைகளை வைக்கின்றனர். இதில், திட்டம் தொடர்பான சில தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.

இந்நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அண்மையில் ஓர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, கட்டுமானம் மற்றும் மனைத் திட்டங்களில், அவற்றின் அமைவிடங்களில் இரண்டு அடிக்கு, நான்கு அடி என்ற அளவில், திட்டம் தொடர்பான விவரங்கள் அடங்கிய விவரப் பலகையை கட்டாயம் அமைக்க வேண்டும்.

அதில், மேம்பாட்டாளர் பெயர், திட்டத்தின் பெயர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையப் பதிவு விவரம், பதிவு அடிப்படையில் திட்டப் பணிகள் முடிவடையும் நாள், ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதள முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல் பலகை மற்ற விளம்பரப் பலகையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. தனியாக வைக்கப்படுவதுடன், பொதுமக்கள் எளிதில் படிக்கும் வகையில் அதற்கான எழுத்துருக்கள் இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்த பின்னர், அந்த தகவல் பலகை நிறுவப்பட்டால், கட்டுமானப் பொறியாளர் சான்றிதழ், திட்ட புகைப்படம் ஆகியவையும் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in