Published : 28 Jul 2018 08:30 AM
Last Updated : 28 Jul 2018 08:30 AM

மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் 27.7.2015 அன்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் உயிரிழந்தார்.

கலாம் உடல் அவர் பிறந்த ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது.  ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர், மகன் ஜெயினுலாபுதின், ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

 தமிழக  அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்  துறை அமைச்சர் எம். மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுன்டேஷன் சார்பாக ராமேசுவரத்தில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.கலாம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொதுமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x