Published : 20 Jun 2025 05:41 AM
Last Updated : 20 Jun 2025 05:41 AM
விழுப்புரம்: என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் அவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து கடந்த 10-ம் தேதி உளுந்தூர்பேட்டைக்கு குடும்பத்துடன் காரில் சென்றேன். கடந்த 11-ம் தேதி அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தோம். வலது திசையில் கார் சென்றபோது, இடது திசையில் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென வலது திசையில் இயக்கப்பட்டு, பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனால், பேருந்து மீது நான் பயணித்த கார் மோதியது.
அதற்கடுத்த 2 நிமிடங்களில் இரு தனியார் சொகுசு பேருந்துகள் அங்கு வந்தன. ஒரே இடத்தில் திடீரென 3 தனியார் சொகுசு பேருந்துகள் வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதலுக்கு காரணமான பேருந்துக்கு உரிய அனுமதி பெறவில்லை. மேலும், பேருந்தில் பயணிகளும் பயனிக்கவில்லை.
அப்போது 5 பேர் என்னை நோக்கி வந்தனர். அந்த நேரத்தில், உளுந்தூர்பேட்டை பாஜக நகரத் தலைவரின் வாகனம் அங்கு வந்ததால், என்னை நோக்கி வந்தவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். திட்டமிட்ட தாக்குதலுக்கான முகாந்திரம் உள்ளதால், இதுவிசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அஸ்வத்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீதான திட்டமிட்ட தாக்குதல் தொடர்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
நல்ல பக்தி மாநாடு எப்படி நடைபெறும் என்பதை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வந்து தெரிந்து கொள்ளுமாறு அமைச்சர் சேகர்பாபுக்கு அழைப்பு விடுக்கிறோம். `திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறியதில் அரசியல் இல்லை, முருக பக்தர்கள் ஒன்று கூடி மாநாடு நடத்துவது அரசியல்' என்று கூறிவது சரியா? இந்து கடவுள்களை மட்டும் கேவலமாகப் பேசுகின்றனர். பக்தி அடிப்படையில் இந்துக்கள் கூடினால், திமுகவால் பொறுக்க முடியவில்லை. திமுக, விசிக போன்ற கட்சிகள் மதவாத அரசியலில் இருந்து வெளிவர வேண்டும். இவ்வாறு அஸ்வத்தமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT